கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.அபராத தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Published on

சென்னை:

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சுகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், கோவில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே ஐகோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

இவரது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த அபராத தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறிள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com