search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்- கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை
    X

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்- கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை

    • பென்னாகரத்தில் அ.தி.மு.க. கூட்டம் டெபாசிட் இழந்ததுபோல ஈரோட்டிலும் டெபாசிட்டை இழக்கும்.
    • இரட்டை இலை இந்த தேர்தலில் நிற்பதால் அ.தி.மு.க.வின் பல பிரிவை காட்டிலும் அதிகம் மகிழ்வது தி.மு.க.தான்.

    சென்னை:

    தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆளும் கட்சியின் இரட்டை இலையை தனது சுயேட்சை சின்னமான குக்கரால் 40 ஆயிரம் வாக்குகளில் வெல்ல முடிந்த தினகரன் இன்று சின்னம் கிடைக்காததால் நிற்கவில்லை என்பது பாடத்தெரியாதவன் பசுந்தமிழையும் ஆடத்தெரியாதவன் மேடையையும் குறை சொன்னதனைப்போல உள்ளது.

    விடிய விடிய சிலம்பம் ஆடிவிட்டு விடிந்த பின் கிழவியை அடித்த கதையாய் நிற்காத தேர்தலுக்கு தினகரன், ஓ.பி.எஸ். இத்தனை கமிட்டிகளா? வெல்வது தளபதி தான் என்று தெரிந்தும் எதற்கு இந்த கானல்நீர் ஆர்ப்பாட்டம்.

    பென்னாகரத்தில் அ.தி.மு.க. கூட்டம் டெபாசிட் இழந்தது போல ஈரோட்டிலும் டெபாசிட்டை இழக்கும். திண்டுக்கல்லில் மருங்காபுரியில் அ.தி.மு.க. வென்றதுபோல் ஈரோட்டில் வெல்லும் என்று செங்கோட்டையன் கூறுகிறார்.

    1980-ல் இரட்டை இலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 38 இடங்களில் தோற்றதையும் 1996-ல் பர்கூரில் ஜெயலலிதாவே இரட்டை இலையில் சுகவனத்திடம் தோற்றதையும் பென்னாகரத்தில் 2010-ல் இரட்டை இலை டெபாசிட் இழந்ததையும், 2017-ல் சுயேட்சை சின்னத்திடம் ஆளும் கட்சியாக இருந்துகொண்டு இரட்டை இலை 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதையும் மறக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. கட்சியை விட்டு நீக்கியதாக சொல்லப்பட்ட ஓ.பி.எஸ்.சிடமும் அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் விடுத்ததும் இரட்டை இலையை பெறுகின்ற சூழல் என்றால் அதை வேண்டாம் எனக்கூறி புதிய சின்னம் வாங்கி உங்கள் செல்வாக்கை நிரூபித்து இருக்கலாமே? தன்மானத்துடன் வெளியேறி இருக்கலாமே?

    இரட்டை இலை இந்த தேர்தலில் நிற்பதால் அ.தி.மு.க.வின் பல பிரிவை காட்டிலும் அதிகம் மகிழ்வது தி.மு.க.தான். ஏனெனில் தேர்தல் தோல்விக்கு பின் இரட்டை இலை இருந்திருந்தால் வென்று இருப்போம் என நழுவும் பேச்சுக்கு இடம் தராமல் இப்போதே தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து வெல்வது நல்லது.

    தளபதியின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். சிலருக்கு நோட்டாவுடன் போட்டி, அ.தி.மு.க.வுக்கு டெபாசிட்டுடன் போட்டா போட்டி. மதுரையில் சிலம்போடு கோவலன் கதை முடித்தது, ஈரோட்டில் இடைத்தேர்தலோடு எடப்பாடி கூட்டம் கதை முடிந்தது என்பதை இந்த தேர்தல் காட்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×