

புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.
இதில் 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி முழுமையாக படித்து முடித்த பின்னர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.