search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: டிரைவர்-பெண் பலி
    X

    விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடப்பதை காணலாம்.

    மேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: டிரைவர்-பெண் பலி

    • காரை ஹானஸ்ட்ராஜின் உறவினரான சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
    • விபத்து குறித்து மேலூர் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலூர்:

    சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள பி.பி.நகரை சேர்ந்தவர் ஜான் தங்கராஜ். இவரது மகன் ஹானஸ்ட்ராஜ் (வயது29). இவரது மனைவி பவானி (27). இவர்களுக்கு பத்து மாதத்தில் மகிழ் என்ற பெண் குழந்தை உள்ளது. ஹானஸ்ட்ராஜ் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர்களது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஹானஸ்ட்ராஜ் தனது மனைவி, குழந்தை, தாய் ஜெயராணி (47) ஆகியோரை அழைத்து கொண்டு சமீபத்தில் வாங்கிய புதிய காரில் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார்.

    காரை ஹானஸ்ட்ராஜின் உறவினரான சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்களது கார் திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    சூரக்குண்டு பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வாகனங்கள் அருகே உள்ள சாலை வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் பாலம் கட்டும் பணி நடக்கும் இடத்தில் முறையான அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகள் எதுவும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஹானஸ்ட்ராஜ் குடும்பத்தினர் வந்த கார் அந்த வழியாக இன்று காலை வந்தது. அவர்களது கார் திடீரென சாலையின் பக்கவாட்டில் இருந்து தடுப்பு சுவரில் மோதி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பவானி மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்கள் இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் ஹானஸ்ட்ராஜ், அவரது 10 மாத குழந்தை மற்றும் அவருடைய தாய் ஆகிய 3 பேரும் காரின் பின் பகுதியில் இருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×