தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - சட்டசபையில் மசோதா தாக்கல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தல் தள்ளி போய் கொண்டு இருப்பதால் 6 மாதத்திற்கு ஒரு முறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டசபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்டமன்ற தொகுதி வாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உள்ளாட்சி வார்டு வாரியாக மாற்றி அதன்படி வாக்குசாவடிகளை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட வேண்டியதுள்ளது.

அண்மையில் தான் வாக்காளர் பட்டியலின் வன்நகல் மற்றும் மென்நகல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உரிய ஒப்புதலோடு பெறப்பட்டு, இது தொடர்பான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் மென்படிவத்திலான வாக்காளர் பட்டியலுக்கு ஏப்ரலில் தன்னுடைய ஒப்புதலை வழங்கியுள்ளது. அந்த வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக மாற்றுவதற்கும், இப்பணியை செய்து முடிப்பதற்கும் 95 நாட்கள் காலம் தேவை என தேசிய தகவல் மையம் கோரியுள்ளது.

அதனால், உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கு முன்பு, உள்ளாட்சி அமைப்பு தேர்தல் தேதியை அறிவிக்க இயலாது. இந்த சூழ்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சியாக மாற்றப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தற்போது அந்த அறிவிப்புக்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com