மாணவரின் தந்தை மரணம், மத்திய அரசின் பச்சை படுகொலை - சீமான் கண்டனம்

நீட் தேர்வு எழுத சென்ற மாணவரின் தந்தையை மத்திய அரசு பச்சையாக படுகொலை செய்துள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். #NEET2018 #Seeman
மாணவரின் தந்தை மரணம், மத்திய அரசின் பச்சை படுகொலை - சீமான் கண்டனம்
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடியைச் சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வுக்காகக் கேரளா சென்றபோது அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது ஆழ்ந்த மனவேதனையை தருகிறது.

நீட் தேர்வின் மூலம் கடந்தாண்டு தங்கை அனிதாவை காவுகொண்ட மத்திய அரசானது தனது கோரப்பசி அடங்காது இப்போது கிருஷ்ண சாமியைப் பலிகொண்டிருக்கிறது. நீட் தேர்வையே முழுவதுமாக எதிர்த்துத் தமிழகம் போராடிக் கொண்டிருக்கையில் வலுக்கட்டாயமாக நீட் தேர்வினை திணித்து அதுவும் வெளிமாநிலங்களில் கேரளாவிலும், ராஜஸ்தானிலும் நீட் தேர்வு மையங்களை அமைத்து வஞ்சகம் புரிந்தது மத்திய அரசு. இதன்மூலம் நீட் தேர்வை எதிர்கொள்ளாமலே லட்சக்கணக்கான மாணவர்கள் தோல்வியுறுவார்கள் என எச்சரித்ததையும் மீறி நீட் தேர்வினை வேற்று மாநிலங்களில் அமைத்ததே இன்றைக்கு ஒரு உயிரைப் போக்கியிருக்கிறது. இது மத்திய அரசின் பச்சை படுகொலை.


நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறிப் போராடுகிறவர்களை, நீட் தேர்வு மையங்களைத் தமிழகத்தில் அமைக்கக்கோரி போராட வைக்க வேண்டும் என்கிற உள்நோக்கம் ஒன்றே இதற்குக் காரணமாகும்.

அனிதா என்கிற மகளைக் கொன்று தந்தையை அழ வைத்தவர்கள், இன்றைக்குத் தந்தை கிருஷ்ணசாமியைக் கொன்று மகனை அழ வைத்திருக்கிறார்கள். மருத்துவக் கனவோடு தேர்வேழுதச் சென்று தனது தந்தையை இழந்து விட்டு தவிக்கும் அந்த இளம்பிள்ளைக்கு மத்திய, மாநில அரசுகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சுமந்து நிற்கும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தினை என்ன வார்த்தைகூறி தேற்றப் போகிறார்கள்? தேர்வெழுதிவிட்டு வெளியே வந்து, தனது தந்தை இறந்ததுகூடத் தெரியாமல் ‘அப்பா எங்கே?’ எனக் கேட்ட அந்த மகனிடம் என்ன பதில் சொல்லப் போகிறது மத்திய அரசு?

மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு வெறுமனே நிவாரணம் அளிப்பது மட்டும் தீர்வாக அமையாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெறுவதே இனியும் இழப்புகளைச் சந்திக்காமல் தடுக்க இருக்கிற ஒரே வழியாகும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை இனி மன்றங்களில் ஒலிக்கவேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com