

போர்ட் எலிசபெத்:
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்கிராம் பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது. தவான் 34 ரன்களிலும், விராட் கோலி 36 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும், டோனி 13 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தென்ஆப்ரிக்கா சார்பில் நிகிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாசிம் அம்லா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 71 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். மற்ற வீரர்கள் சோபிக்காததால், தென்ஆப்ரிக்கா அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், பாண்டியா, சாஹல் ஆகியோர் 2 விக்கெட்களும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக பெற்ற வெற்றி என்பது வெளிநாடுகளில் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா பெற்ற வெற்றிகளில் வெளிநாடுகளில் கிடைத்த மாபெரும் வெற்றி இது என நினைக்கிறேன். இந்த தொடரில் பெற்ற சிறப்பான வெற்றியுமாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2007-08ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிகவும் சவாலான முத்தரப்பு தொடரில் வெற்றி பெற்றுள்ளோம்.
முதல் ஆட்டத்தில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடி வந்துள்ளோம். அதனால் தொடரில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். அதன் பலனை அனைவரும் கண்கூடாக பார்க்கிறீர்கள்.
இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்ரிக்காவில் தொடரை வென்றுள்ளோம். இங்கு கிரிக்கெட் விளையாடுவது எளிதானதல்ல என்பதால் தொடரை வெல்வதும் எளிதான காரியமல்ல. அணி வீரர்களின் கணிசமான பங்களிப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. #INDvSA #rohitsharma #tamilnews