

சென்னை :
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-
பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.
கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர் துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.