முதல் முறையாக வெளிப்படையாக மனம் திறந்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

சென்னை:

அரசியல் பிரவேசம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று தெரிவித்த அவர் அதன் பிறகு பெரிய அளவில் அரசியல் தொடர்பான தனது எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருந்தார்.

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை நானே நிரப்புவேன் என்றும் எம்.ஜி.ஆர். தந்த ஆட்சியை என்னாலும் தர முடியும் என்றும் தனது உள்ளத்தில் இருப்பதை கூறி இருந்தாலும் தனது அரசியல் எது மாதிரியாக இருக்கும் என்பது பற்றி வாய் திறக்காமலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் பதவிக்கு எப்போதுமே நான் ஆசைப்பட்டது இல்லை. அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அதனை நல்லவர்கள் துணையோடு செயல்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன் என தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கிய பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமராமல் அதில் யாரை அமர்த்துவது என்கிற செயல்பாட்டை மட்டுமே மேற்கொள்வார் என்று தெரிகிறது.

இது தொடர்பாக தனது அரசியல் எப்படி இருக்கும் என்பது பற்றி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டு அவர்களை எதிர்கொள்ள வகுக்க வேண்டிய வியூகங்கள் பற்றியும் ரஜினி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் இரண்டு கட்சிகளையும் வீழ்த்த வரும் தேர்தலில் ரஜினிகாந்த் அதிரடியாக களம் காண்பார் என்பது உறுதியாகி உள்ளது.

ரஜினி தனது பேட்டியை முடிக்கும் போது ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று கூறினார். இதன் மூலம் அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கும் மற்ற கட்சிகளுடன் இணைந்து அவர் செயல்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் வேட்பாளராக அவர் யாரை முன் நிறுத்தப் போகிறார் என்பதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் கட்சியை தொடங்கும் முன்னரே தனது திட்டங்கள் என்னென்ன என்பதை ரஜினி தெளிவுப்படுத்தி உள்ளார். தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இன்னும் 3 மாதங்களில் புதிய கட்சியின் பெயரை அவர் அறிவிக்கலாம். அதன் பிறகு ரஜினியின் அரசியல் பிரவேசம் மேலும் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com