

புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து சீனியர் எஸ்பி திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவயைில் சில பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் குறைந்த வயதுடையவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கின்றனர். இதனால் அவர்களின் உயிர் மட்டுமின்றி, பிற சாலை பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
குறைந்த வயதில் வாகனம் ஓட்டுதல் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதம். குறைந்த வயதுடையோர் வாகனம் ஓட்டும் போது பிடிபட்டால் பெற்றோர், வாகன உரிமையாளர் குற்றவாளியாக கருதப்பட்டு ரூ.25 ஆயிரம் வரை அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை, ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்டு செய்யப்படும்.
வாகனம் ஓட்டுவோர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மேலும் 25 வயது வரை அவர் ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இழப்பார். பயன்படுத்தப்பட்ட வாகன பதிவு 12 மாதம் ரத்து செய்யப்படும். கடந்த 20ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடந்த சிறப்பு சோதனையில் குறைந்த வயது வாகனம் ஓட்டியது தொடர்பாக 30 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் பொறுப்புடன், எந்த சூழலிலும் குறைந்த வயதுடையவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம். பள்ளிகளிலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் புதுவை முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். விதி மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.