

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை ஆட்சியில் பிரதான பங்கை என்.ஆர்.காங்கிரஸ்தான் வகிக்கிறது. அதில் நாங்கள் மைனர் பார்டனர்தான். இதனால் சபாநாயகர் தேர்தல், அமைச்சர்கள் இலாகா ஒதுக்குவது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் பதிலளிக்க வேண்டும்.
பாஜக தலையிட்டால் பாஜக ஆளுமை செய்கிறது என கூறுகின்றனர். தலையிடாவிட்டால் இதை கேட்கமாட்டீர்களா? என்கின்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசுகிறார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருந்ததோ, அதேதான் தவெக ஆட்சியிலும் நீடிக்கிறது. 3 வயது முதல் 70 வயது வரையிலான பெண்களுக்கு தமிழகத்தில் தவெக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
பிற கட்சிகளில் உள்ள குழப்பத்தை பயன்படுத்த தமிழக தவெக அரசு முயற்சி செய்கிறது. தமிழக தவெக ஆட்சியில் குதிரை பேரம் சிறப்பாக நடக்கிறது. தமிழக தவெக ஆட்சியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதான் உள்ளது. இதனால் மேகதாது அணை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக காங்கிரஸ் அரசுடன் பேசி தீர்க்கலாம்.
அரசியலமைப்பு சட்டம் கவர்னருக்கு சில தனிப்பட்ட அதிகாரங்களை கொடுத்துள்ளது. மக்களுக்கு சேவை செய்யவே கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளனர். அந்தஅடிப்படையில் தனக்கு வரும் புகார்கள், கோரிக்கைகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம். இதில் எந்த தவறும் இல்லை.
திமுக ஆட்சியில் அதிமுகவின் திட்டங்களை பெயர் மாற்றுவதும், அதிமுக ஆட்சியில் திமுக திட்டங்கள் பெயர்களை மாற்றுவதும் வாடிக்கையானது. அதேபோல தவெகவும் திமுகவின் திட்டங்களை பெயர் மாற்றுவது, பெயர் பலகை அகற்றும் வேலையை செய்கின்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் சினிமா டயலாக் போல் ஆவேசமாக பேசுகிறார். ஊழலை ஒழிப்போம் என கூறினார். ஆனால் மாவட்டந்தோறும் அரசு வக்கீல்களை நியமிக்க அமைச்சரே லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.