புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது
Published on

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படி 2026-27 கல்வியாண்டுக்கான

வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள அரசு நிதி உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 1-ந் முதல் 31-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். எனவே பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி புதுச்சேரியில் பள்ளிக் கல்வித்துறையானது புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.

மேலும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நேற்று பள்ளிகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. நேற்று இறுதி நாள் என்பதால் பள்ளி முடிந்தவுடன் மாணவ-மாணவிகள் நண்பர்கள், தோழிகளுடன் குதூகலத்துடன் சென்றதை காண முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com