புதுச்சேரியில் கலங்கரை விளக்கத்தை பார்வையிட இன்று முதல் அனுமதி..

புதுச்சேரி கடற்கரைச் சாலை மற்றும் ஒட்டுமொத்த நகரத்தின் 360-டிகிரி காட்சியை ரசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Puducherry  lighthouse
Published on

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 190 ஆண்டுகள் பழமையான பழைய கலங்கரை விளக்கம் முற்றிலும் சீரமைக்கப்பட்டு, இன்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில், கடந்த 1836-ஆம் ஆண்டு வங்காள விரிகுடா கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் நோக்கில் இந்த பழைய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.

29 மீட்டர் உயரமும் 132 படிக்கட்டுகளும் கொண்ட இந்த பாரம்பரியக் கட்டிடம், சோழமண்டலக் கடற்கரையில் அமைக்கப்பட்ட முதல் கலங்கரை விளக்கமாகும்.

1979 வரை பயன்பாட்டில் இருந்த இக்கோபுரம், காலப்போக்கில் மோசமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சரால் திறப்பு..

புதுச்சேரியின் பழைய கலங்கரை விளக்கத்தை, கடந்த ஜூன் 25-ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறைப்படி திறந்து வைத்தார்.

பார்வை நேரம்..

சுற்றுலா மேம்பாடு மற்றும் வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த பழைய கலங்கரை விளக்கம் இன்று முதல் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

நாள்தோறும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

சுற்றுலாப் பயணிகள் இதன் மேல் தளத்திற்குச் சென்று புதுச்சேரி கடற்கரைச் சாலை மற்றும் ஒட்டுமொத்த நகரத்தின் 360-டிகிரி காட்சியை ரசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் முக்கிய கலாச்சார அடையாளமாக விளங்கும் இந்தத் தளம், இனி வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com