‘வீடு புகுந்து தாக்குதல்’: தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் 10-ந்தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்: நீதிபதி உத்தரவு

தமிழகத்தில் பட்ஜெட் பணிகள் நடந்து வருவதால், மரியவில்சன் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
மரிய வில்சன்
Published on

தமிழக வெற்றி கழகம் சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன் தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

தாக்குதல்

இவரும், இவரது தந்தை நெஸ்டோர் ஆகியோர் சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8ந் தேதி இரவு 8 மணிக்கு புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது அண்ணன் மரிய கிளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அண்ணன் மரிய கிளோத், அண்ணி கெரோலின் ஆகியோரை ஆபாசமாக திட்டி, உருட்டு கட்டையால் தாக்கினர்.

மேலும், கெரோலின் ஆடைகளை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தி, "நாங்கள் நடத்தி வரும் செயின்ட் ஆண்டனி பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம்" என மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

வழக்கு

படுகாயமடைந்த மரிய கிளோத் மற்றும் கெரோலினா லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மரிய வில்சன், நெஸ்டோர் ஆகியோரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த மாத வாய்தாவின் போதும் மரிய வில்சன் ஆஜராகவில்லை.

ஆஜராக உத்தரவு

இந்த நிலையில் குற்றப்பத்திரிகையை நேரில் பெற ஜூலை 4-ந்தேதி (இன்று) சனிக்கிழமை நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட்டு சேரலாதன் உத்தரவிட்டுள்ளார். அதனால், இன்று நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், அவரின் தந்தை நெஸ்டோர் ஆகியோர் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்கப்பட்டது.

ஆனால் இன்றும் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் வக்கீல் சிவக்குமார் ஆஜரானார். அவர் நீதிபதி சேரலாதனிடம், தமிழகத்தில் பட்ஜெட் பணிகள் நடந்து வருவதால், மரியவில்சன் நேரில் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார்.

நீதிபதி கேள்வி

அதற்கு நீதிபதி சேரலாதன், இன்று சனிக்கிழமை, விடுமுறை நாள் என்பதால்தான் ஆஜராகும்படி கூறினேன். இப்போதும் ஆஜராகவிட்டால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினார். மேலும் வரும் 6-ந்தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என கூறினார். வக்கீல் சிவக்குமார், அன்றைய தினமும் ஆஜராக முடியாது என கூறினார். இதையடுத்து நீதிபதி சேரலாதன், வரும் 10-ந்தேதி கட்டாயமாக கோர்ட்டில் மரியவில்சன் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு விசாரணையின்போது புகார்தாரர் தரப்பில் வக்கீல் பிரவீன் ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com