

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். இவர் தற்போது தமிழ்நாடு நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் வீடு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தொழில் போட்டி காரணமாக மரிய வில்சன் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடுபுகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மரிய வில்சன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது மரிய வில்சன் ஆஜராகாத நிலையில் நாளை கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடுபுகுந்து தாக்கியது தொடர்பான வீடியோக்கள், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.