

தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மூலமாக 2021ம் ஆண்டு தேர்தல் நெருக்கத்தில் இந்த நட்பு உருவானது. இதனால் 2021-ல் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி, புரோட்டாகால் மீறி சென்னை பனையூரில் உள்ள வீட்டில் விஜய்யை நேரடியாக சந்தித்து பேசினார்.
அப்போது முதல் நட்பு பலப்பட்டது. இதன்பின்னர் விஜய் கட்சி தொடங்க பல்வேறு யோசனைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கி வந்தார். அவர்கள் அவ்வப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சந்தித்து பேசுவதாகவும் தகவல்கள் வெளியானது.
இதேபோல தவெக முதல் மாநாடு, கூட்டம் ஆகியவற்றுக்கும் ரங்கசாமி ஆலோசனைகளை கூறி வந்தார். கரூரில் நடந்த சோக சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் விஜய் மக்கள் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மீண்டும் மக்கள் சந்திப்பை தொடர முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதுணையாக இருந்தார்.
தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் புதுவையில் தவெக தலைவர் விஜய் கூட்டம் நடத்த அனுமதி அளித்தார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த கூட்டம் நடந்தாலும், விஜய் மீண்டும் தமிழகத்தில் மக்களை சந்திக்க அனுமதி பெற எளிதாக இருந்தது.
இதனால் என்ஆர்.காங்கிரஸ், தவெக கூட்டணி புதுவையில் அமையும் என்றும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் யூனியன் பிரதேசமான புதுவைக்கு மத்திய அரசின் உதவி தேவை என்பதால், முதல்-அமைச்சர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணியை தொடர்ந்தார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி புதுவையில் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சராகியுள்ளார். ஆனாலும் முதல்-அமைச்சர்கள் விஜய், ரங்கசாமி நட்பு தொடர்கிறது. கடந்த வாரம் புதுவைக்கு வந்த தவெக பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான ஆனந்த் நள்ளிரவில் ரங்கசாமியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு போன் மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது, முதல்-அமைச்சர் ரங்கசாமி, நல்லா போயிட்டிருக்கில்ல.. நல்லா பண்ணுங்க.. அமைச்ர் ஆனந்திடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கேன், ஒன்ணும் பிரச்சனையில்லை, வாழ்த்துகள். நல்லா இருங்க., என வாஞ்சையுடன் கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இதயம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மக்கள் சேவை செய்ய நீங்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும், பலத்தோடும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.