Puducherry Election | கூட்டணி தொடருமா? முறியுமா? - ரங்கசாமியுடன் பா.ஜ.க. இறுதிகட்ட பேச்சுவார்த்தை

இன்று புதுச்சேரி வரும் பா.ஜ.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசுகின்றனர்.
Puducherry Election | கூட்டணி தொடருமா? முறியுமா? - ரங்கசாமியுடன் பா.ஜ.க. இறுதிகட்ட பேச்சுவார்த்தை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியே வரும் தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக உறுதியளித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் சில திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டது. அதில் கூட்டணியில் புதிய கட்சிகள் எதையும் சேர்க்க கூடாது என முதல்- அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

ஆனால் ரங்கசாமிக்கு அளித்த 16 தொகுதிகள் போக மீதமுள்ள 14 தொகுதிகளை அ.தி.மு.க., மற்றும் புதிய கட்சிக்கு பிரித்து கொடுக்க பா.ஜ.க. முடிவு செய்திருந்தது.

இதற்கு என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் வெளியேறும் என ரங்கசாமி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த தகவலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம், நேரடியாக என்.ஆர். காங்கிரஸ் குழுவினர் தெரிவித்தனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த தகவலை கட்சி தலைமைக்கு நேரடியாக தெரிவிக்க, மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அங்கு புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து, டெல்லியில் இருந்தபடியே முதல்-அமைச்சர் ரங்கசாமியை போனில் தொடர்பு கொண்டு சமரசம் செய்ய முயற்சித்தனர். இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் ரங்கசாமியின் நிபந்தனையை ஏற்கப்படுமா? என்பது தெரியவரும்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அவரது வீட்டில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர். இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று புதுச்சேரி வரும் பா.ஜ.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசுகின்றனர். அதன் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி தொடருமா? முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பம் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com