புதுச்சேரி நீட் தேர்வு மையங்களில் போலீசார் சோதனை, கண்காணிப்பு- தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

நீட் தேர்வு ஆவணங்கள், வினாத்தாள்கள் வைக்க வங்கிகளில் ஸ்ட்ராங் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி நீட் தேர்வு மையங்களில் போலீசார் சோதனை, கண்காணிப்பு- தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
Published on

எம்பிபிஎஸ், பல் மருத்துவம் உட்பட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

புதுவை பிராந்தியத்தில் 9 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 4,440 பேர் எழுத உள்ளனர். அதிகபட்சமாக பல்கலைக்கழகத்தில் 960 பேர் எழுதுகின்றனர். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 720 பேர், ஜிப்மர் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 480, காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி 240, நவோதயா வித்யாலயா பள்ளி-240, சின்னத்தா அரசு பெண்கள் பள்ளியில்-480, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி-480, வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் பள்ளியியில் 480, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரியில் 360 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

நீட் தேர்வினையொட்டி பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் அரை கை கொண்ட வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். முழுக்கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிய அனுமதி இல்லை. ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்க கூடாது.

குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருபாலரும் எக்காரணத்தை கொண்டும் ஷூக்கள் அணிய கூடாது. தேர்வர்கள் காதணிகள், மோதிரங்கள், பதக்கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ, ஆபரணங்களையோ அணிந்து வரக்கூடாது.

மத அல்லது கலாசாரரீதியான ஆடைகளை அணிந்து வரும் தேர்வர்கள், முறையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேர்வர்கள், தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வர வேண்டும். செல்போன்கள், புளூடூத் கருவிகள், இயர்போன்கள், மைக்ரோ போன்கள், பேஜர்கள், கால்குலேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற எந்த மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகிதங்கள், ஜியோ மெட்ரிபாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், பேனா, ஸ்கேல், ரைட்டிங் பேட், பென் டிரைவ் மற்றும் எரேசர் உட்பட எந்த பொருட்களை கொண்டு வரக்கூடாது. பர்சுகள், கூலிங் கிளாஸ்கள், ஹேண்ட் பேக்குகள், பெல்ட்கள் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்படாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஆவணங்கள், வினாத்தாள்கள் வைக்க வங்கிகளில் ஸ்ட்ராங் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முக்கிய ஆவணங்களை வங்கி பாதுகாப்பு அறையில் இருந்து தேர்வு மைய அறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் நாளை காலை எடுத்து செல்லப்படுகிறது.

இந்த பணிகளில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 13 எஸ்ஐக்கள், 73 போலீசார், 11 ஐஆர்பிஎன் உட்பட 100 போலீசார் ஈடுபடுவர்.

தேர்வுக்கு வருவோர் மையத்துக்கு எளிதாக செல்ல போக்குவரத்து சீரமைப்பு பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்கள் உள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் சந்தேகத்துக்கு உரிய சாதனங்கள் பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை செய்யவும் போலீசாருக்கு உத்தரவிடப்ப்டுள்ளது.

தேர்வு மையங்கள் அருகே தேர்வுக்கு வருவோரின் வாகனங்கள் முறையாக நிறுத்துவதையும் போலீசார் உறுதி செய்யவேண்டும் என்று எஸ்எஸ்பி கலைவாணன் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com