

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் நேடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் தீரமிகு வீரர்கள் வாழ்ந்த புதுச்சேரிக்கு நான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் சகோதர மாநிலமான புதுச்சேரியின் புது வளர்ச்சிக்காக உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டுக்கும்– புதுச்சேரிக்கும், எப்போதும் ஒன்றாகத்தான் தேர்தல் நடக்கும்! ஆனால், இந்த முறை மாற்றி, புதுச்சேரிக்கு முன்கூட்டியே நடத்துகிறார்கள். தேதியை மாற்றினால், நம்முடைய உணர்வுகளை மாற்றிவிட முடியுமா?
கடந்த ஒரு வாரமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து, வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வு என்பது, மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும்! அதைத்தான் விரும்புகிறார்கள்! டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்குத் தலையாட்டும் அடிமைகள் கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை. அதே உணர்வுதானே புதுச்சேரி மக்களான உங்களிடமும் இருக்கிறது? இருக்கிறது (மக்கள்). என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் தயாரா? தயார் (மக்கள்).
சாதாரண மண்ணா இது? புகழ்பெற்ற புதுச்சேரி! இந்த மண்ணை பா.ஜ.க.வும் - என்.ஆர்.காங்கிரசும் என்ன நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்? எப்படிப்பட்ட தலைவர்களைக் கொடுத்த மண் இது?
ஆனால் இன்றைக்கு- பாரதீய ஜனதா கட்சி, அரசியல் மாண்புகளையே குழிதோண்டி புதைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளால் புதுச்சேரி மண், தன்னுடைய பாரம்பரிய பெருமைகளை இழந்து கொண்டிருக்கிறது.
அழகான புதுச்சேரியில், N.D.A. கூட்டணியின் அலங்கோலமான ஆட்சி நடக்க நீங்கள் அனுமதிக்கலாமா? நம்முடைய டிமாண்ட் என்ன? ஒட்டுமொத்த புதுச்சேரியின் கோரிக்கை என்ன? புதுச்சேரி- மாநிலம் ஆக வேண்டும்! பதினாறு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டோம். ஆனால், ஒன்றிய அரசுக்கு மனமில்லை! இல்லை என்று சொல்லி கையை விரித்துவிட்டார்கள்!
ஏன் என்றால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும்- தமிழ்நாடு போன்ற மாநிலங்களை முனிசிபாலிட்டிகளாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோன்று, புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்காமல், ஊராட்சி அளவுக்கு ட்ரீட் செய்கிறார்கள். இங்கு இருக்கும் உங்கள் அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டசபைக்கு மாண்பு இருக்கிறதா? உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மரியாதையாவது இருக்கிறதா? இங்கு ஆல்-இன்-ஆல் யார்? ஆளுநர்! ஆளுநர் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதலமைச்சராக வைத்திருப்பவர்கள், சாமானிய மக்களையா வாழ விடுவார்கள்?
இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! அதற்கான அருமையான வாய்ப்புதான் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி! புதுச்சேரியின் புதிய விடியலுக்கான நாள், ஏப்ரல் 9. விடியலுக்குப் புதுச்சேரி தயாரா? தயார் (மக்கள்). புதுச்சேரியை மட்டுமல்ல; மக்களாட்சியையும் காக்க வேண்டிய கடமை உங்கள் கையில் இருக்கிறது! நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரசு, உங்களுக்காக செயல்படும் அரசாக இருக்க வேண்டும். டெல்லியின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக இருக்கவே கூடாது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு இங்கு வந்த பிரதமர் மோடி அவர்கள், பெஸ்ட் புதுச்சேரியாக ஆக்குவோம் என்று சொன்னார். ஆனால், என்ன ஆகியிருக்கிறது? வொர்ஸ்ட் புதுச்சேரியாக ஆக்கியிருக்கிறது என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி.
சில நாட்களுக்கு முன்பு, இங்கு வந்த அமித் ஷா “டபுள் எஞ்சின் ஆட்சியால் வளர்ச்சி அதிகமாகியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார். எங்கு வளர்ந்திருக்கிறது புதுச்சேரி? ஒருவேளை, கடலுக்கு அந்தப் பக்கம் இருக்குமோ?
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.