புதுச்சேரி மதுவை தமிழகத்திற்கு எடுத்து செல்ல அனுமதி உள்ளதா?- கலால்துறை விளக்கம்

புதுவை கலால் விதியை காரணம் காட்டி, தமிழக பகுதிக்கு மதுபானங்களை கொண்டு செல்வது தவறு.
புதுச்சேரி மதுவை தமிழகத்திற்கு எடுத்து செல்ல அனுமதி உள்ளதா?- கலால்துறை விளக்கம்
Published on

புதுவையில் இருந்து மதுபாட்டில் கொண்டு சென்றவர் மீது தொடரப்பட்ட வழக்கை, சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

தனி நபர் ஒருவர், தன் பயன்பாட்டுக்கு, 4 1/2 லிட்டர் மதுவை வைத்திருக்க, தமிழக அரசு விதிகள் அனுமதிக்கிறது. இந்த நிலையில், புதுவையில் இருந்து எடுத்து வரப்பட்ட, 1.680 லிட்டர் மதுபானம் மட்டுமே அவரிடம் இருந்ததால், வழக்கை ரத்து செய்வதாக, ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.

இதனால் இனி, புதுவையில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவில் மதுபானத்தை தமிழகத்திற்கு எடுத்து செல்லலாம் என சமூக வலைதளங்கில் தகவல் பரவியது. இதுகுறித்து புதுவை, கலால் அதிகாரிகள் கூறியதாவது:-

புதுவையில், தனி நபர் மதுபானங்கள் கொண்டு செல்ல, கலால் சட்டம் அனுமதிக்கிறது. இதன்படி, தனி நபர் ஒருவர், தன் சொந்த நுகர்வுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை 4 1/2 லிட்டர் வரை வைத்திருக்கலாம். வெளிநாட்டு இறக்குமதி மதுபானமாக இருந்தாலும், 4.1/2 லிட்டர் வைத்திருக்கலாம்.

இது பிராந்தி, விஸ்கி, ஜின், ரம் மது வகைகளுக்கு பொருந்தும். பீர் என்றால் 9 லிட்டர், கள்ளுக்கு 1 லிட்டர் தன் நுகர்வுக்காக வைத்திருக்கலாம். சாராயம், 4 லிட்டர் வைத்திருக்கலாம். அந்த அளவை கடந்து வைத்திருந்தால், அபராதத்துடன் வழக்கு தொடரலாம். இவை அனைத்துமே புதுவை எல்லைக்குள்தான் பொருந்தும்.

அந்த மதுபானங்களை தமிழக பகுதிக்கு கொண்டு சென்றால் பொருந்தாது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் மதுபானம் கொண்டு வருவது சட்டப்படி குற்றம். அந்தந்த மாநில கலால் துறையின் அனுமதி இல்லையென்றால், கடத்தலாக கருதி வழக்கு பதிவு செய்வர்.

தமிழகத்தில் சாராயம், கள்ளுக்கு தடை உள்ளது. புதுவையில், 4 லிட்டர் சாராயம், 1 லிட்டர் கள் கொண்டு செல்லலாம். புதுவை கலால் விதியை காரணம் காட்டி, தமிழக பகுதிக்கு மதுபானங்களை கொண்டு செல்வது தவறு. ஐகோர்ட்டு கூறிவிட்டது என புதுவை மதுவுடன் தமிழக எல்லையில் நுழைந்தால், சிறைக்குத்தான் செல்ல நேரிடும். இரு மாநிலங்களுக்கும் பொதுவான, தெளிவான வழிகாட்டுதல் வரும் வரை இது கடைபிடிக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com