

புதுடெல்லி:
மானிய சுமையை குறைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் 4 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு (14.2 கிலோ) மாதந்தோறும் 2 ரூபாய் (வாட் வரி நீங்கலாக) உயர்த்தும்படி மத்திய அரசு கூறியிருந்தது.
இப்போது, மானியத்தை முற்றிலும் அகற்றும் வகையில், மாதந்தோறும் சிலிண்டருக்கான விலையை 2 ரூபாய்க்கு பதிலாக 4 ரூபாய் உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த அதிரடி முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று பாராளுமன்றத்திலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.
இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் மாநிலங்களவையில் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அரசின் முடிவை திரும்பப்பெற வேண்டும் என கோஷமிட்டனர்.
இவ்விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக அவையின் இதர அலுவல்களை ஒத்திவைக்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் சபாநாயகரை கேட்டுக் கொண்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனால், முதலில் பத்து நிமிடங்கள் வரையிலும் பின்னர் 12 மணி வரையிலும் அவையை ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் அறிவித்தார். மக்களவையிலும் இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.