

புதுடெல்லி:
அரசின் திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செய்யும் நடைமுறைகளை ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த வகையில் ரெயில்வே துறை உள்ளிட்ட சிலவற்றில் குறிப்பிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேபோல அரசு ஆஸ்பத்திரிகளை தனியார் நிர்வகிக்கும் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய அரசின் நிதிஅயோக் அமைப்பு இந்த ஆலோசனையை வழங்கி உள்ளது.
குறிப்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்படுவதற்கு பெரிய அளவிலான ஆஸ்பத்திரிகள் தேவைப்படுகின்றன. ஆனால் தனியார் கல்லூரிகள் அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியை நிர்வகிப்பதில் சிக்கல்கள் உள்ளது.
அதே நேரத்தில் மாவட்ட அளவில் அரசு சார்பில் செயல்படும் பெரிய ஆஸ்பத்திரிகள் பல ஆங்காங்கே இருக்கின்றன. இந்த ஆஸ்பத்திரிகளை குறிப்பிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் ஒப்படைத்து அதை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கலாம் என்று நிதி அயோக் கூறியுள்ளது.
இந்த ஆஸ்பத்திரியில் ஏற்கனவே உள்ளது போல இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் அதற்கான படுக்கைகள் இருக்கும். அத்துடன் கட்டண சிகிச்சை படுக்கைகளும் தனியாக இருக்கும். அவ்வாறு கிடைக்கும் கட்டணத்தை இலவச சிகிச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
இந்த நடைமுறையின் அடிப்படையில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று நிதிஅயோக் கூறியிருக்கிறது. இது சம்பந்தமாக மாநில அரசுகளுடனும், மருத்துவ துறை சார்ந்தவர்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. அதில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும். இந்த திட்டங்களை மாநில அரசுகள் விரும்பினால் அமல்படுத்தலாம், தேவையில்லை என்றால் விட்டுவிடலாம் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இதுபோன்ற நடைமுறை ஏற்கனவே குஜராத் மற்றும் கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு வகையான தனியார் பங்களிப்புகளை கொண்டுவரலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தால் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என சமூக அமைப்புகள் எச்சரித்து உள்ளன. அவ்வாறு பாதிப்பு இல்லாத வகையில் திட்டங்களை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.