

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மம்தா தலைமையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தில் அதிக கவனம் செலுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். ஊடுருவல்காரர்கள், பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை அவர்களின் பிரதான பிரசார பொருளாக உள்ளது.
மறுபுறம் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியலில் 90 லட்சம் பெயர்கள் வரை நீக்கப்பட்டது, பாஜக ஆளும் மாநிலங்களில் புலம்பெயர்ந்து வேலை செய்து வரும் வங்காளிகளுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் ஆகியவற்றை பிரதானமாக பேசி வருகிறார்.
இந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மம்தாவை எதிர்த்து பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் பாஜக ஆளும் மாநிலங்களில் வசிக்கும் புலம்பெயர் வங்காளிகளுக்கு சுவேந்து அதிகாரி வெளிப்படையாக மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நந்திகிராமில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சுவேந்து அதிகாரி, "நீங்கள் அனைவரும் குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பணிபுரிகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
குஜராத்தில் 30,000 வங்காளத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 1,100 பேர் இங்கிருந்து (நந்திகிராம்) வந்தவர்கள். இதேபோல், ஒடிசாவில் 800 பேரும், மகாராஷ்டிராவில் 3,000 பேரும் பணிபுரிகின்றனர்.
அங்குள்ள இரட்டை எஞ்சின் அரசாங்கங்களால்தான் உங்களுக்கு அமைதியாக வேலை கிடைக்கிறது. இதை மறந்துவிடாதீர்கள். மே 4-ஆம் தேதிக்குப் (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) பிறகு எந்தப் பிரச்சினையையும் சந்திக்க விரும்பவில்லை என்றால், இந்தத் தேர்தலில் தவறு செய்யாதீர்கள்.
நீங்கள் மிரட்டும் பார்வைகளுடன் 'ஜெய் பங்களா' போன்ற முழக்கங்களை எழுப்பலாம். ஆனால், நான் எல்லாவற்றையும் குறித்துக் கொள்வேன்" என்று கூறினார்.
தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் வங்காளிகள் மேற்கு வங்கத்திற்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காமல் இருந்தால் அவர்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் பிரச்சசனை தரப்படும் என்பதை சுவேந்து அதிகாரி பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.