

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற 23-ந்தேதி மற்றும் 29-ந்தேதி ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றன.
தேர்தல் தேதி நெருங்கியதால் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் 4 பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். பாங்குரா மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் இன்றைய தனது சுற்று பயணத்தை தொடங்குகிறார்.
அதன்பின் புரூலியா, ஜார்கிராம் மற்றும் மேதினிப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்கு அடுத்தடுத்து நடைபெறும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் பாஜக-வுக்கு அதிக ஆதரவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த பாஜக முயன்று வரும் நிலையில், இந்தப் பொதுக்கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முந்தைய மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், பா.ஜ.க. இப்பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.