

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணியிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மூவர் மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இயந்திர இயக்குநரான சந்திரபான், பீகாரை சேர்ந்த சிவில் ஃபோர்மேன் விகாஷ் குமார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அன்மோல் என அடையாளம் காணப்பட்டனர்.
கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவை தொடர்ந்து, இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ஒருவருக்கு தலை மற்றும் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, மற்றொருவருக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ சேவைகளை ஒருங்கிணைக்க மெப்பாடி சமூக சுகாதார நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் வசிக்கும் 42 குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 142 பேர் மெப்பாடி பாலிடெக்னிக்கில் உள்ள நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சுரங்க நிறுவனம் மண்ணை அகற்றாததே விபத்துக்கு காரணம் என வயநாடு நிலச்சரிவு விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த மண்ணை அகற்றுவதற்கு முன்னரே அறிவுறுத்தியிருந்தோம். சுரங்க நிறுவனம் மண்ணை அகற்றவில்லை. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வுக்குப் பிறகே சுரங்கப்பாதைப் பணி குறித்து முடிவு என கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பிறகே சுரங்கப்பாதைப் பணிகள் தொடரும்.
மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்த பிறகே சுரங்கப்பாதைப் பணிகள் தொடங்கும். நிலச்சரிவு தொடர்பாகவும், விதிகளை மீறி பணிகள் நடந்ததா எனவும் இரு தனித்தனி விசாரணைகள் நடைபெறும். ஒப்பந்ததாரர்கள் விதிகளை மீறினார்களா என விசாரணை நடத்தப்படும்.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார்.