

நேற்று, தொகுதி மறுவரையறை மீதான மக்களவை விவாதத்தின்போது பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மொழியை வைத்து திமுக பிரிவினைவாதம் பேசி வருவதாக கூறிய நிலையில் அதற்கு திமுக எம்பி ஆ.ராசா ஆற்றிய எதிர்வினை கவனம் பெற்று வருகிறது.
ஆ.ராசா பேசியதாவது, "நாட்டை பிரிவினைப்படுத்தும் கட்சி திமுக என்ற குற்றச்சாட்டை தேஜஸ்வி சூர்யா முன்வைத்துள்ளார். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்த போது, மற்ற மாநிலங்களைவிட அதிக நன்கொடையாக தமிழ்நாடு ரூ. 6 கோடி அளித்தது.
1999 ஆம் ஆண்டு வாஜ்பாயி ஆட்சியில் கார்கில் போருக்காக கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ. 100 கோடி கொடுத்தது. தேசியவாதம் பற்றி இவர் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.
மாநில சுயாட்சியை மதிக்காமலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் எங்களின் அடையாளத்தை பாதுகாக்க மட்டுமே குரல் கொடுக்கிறோம்” எனத் தெரிவித்தார். அவர் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.