

உத்தரப் பிரதேசத்தில் வெறும் 16 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 புடவைகளுக்காகப் பெற்ற தாயே தனது சொந்த மகளை விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே 21 அன்று உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சாரநாத் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி அழுதுகொண்டே அலைந்து திரிவதைக் கண்ட உள்ளூர் மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, குழந்தைகள் நலக் அமைப்பின் முன்னிலையில் தனக்கு நேர்ந்த வன்கொடுமைகளைக் கண்ணீருடன் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், சந்தௌலி பகுதியைச் சேர்ந்த லஹ்ரு யாதவ் (எ) ராகேஷ் (40) என்ற மனைவியை இழந்த நபர், சிறுமியின் தாயிடம் இருந்து சிறுமியை ரூ.16,000க்கு விலைக்கு வாங்கி உள்ளார். மேலும் சிறுமியின் தாய் அவரிடம் இருந்து 10 புடவைகளும் பெற்றுள்ளார்.
தனக்கு வயது குறைவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக டெல்லியில் சுமார் 90,000 ரூபாய் செலவில் தலைமுடி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டு சந்தௌலியின் சஹானியா பகுதியிலுள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமியை சட்டவிரோதமாகத் திருமணம் செய்துள்ளார்.
அதன் பிறகு, சிறுமியைத் தனது வீட்டிலேயே அடைத்து வைத்துத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார்.
சிறுமியை வீட்டில் வைத்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று அண்டை வீட்டாரும் உள்ளூர் மக்களும் யாதவை எச்சரித்துள்ளனர்.
இதனால் பயந்துபோன யாதவ், கடந்த மே 19 அன்று அந்தச் சிறுமியைப் பனாரஸ் ரயில் நிலையத்தில் தனியாக விட்டுவிட்டுத் சென்றுள்ளார்.
ரயில் நிலையத்தில் அழுதுகொண்டிருந்த சிறுமியிடம் வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவி வர்மா என்ற ஆட்டோ ஓட்டுநர், அவளை அவளது தாயிடம் அழைத்துச் செல்வதாக கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
ஆனால், அவளை ஒரு ஏரிக்கரைக்குக் கூட்டிச் சென்று, அங்கே சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், மே 21 அன்று சிறுமியை அங்கேயே தவிக்கவிட்டுவிட்டுப் சென்றுள்ளார்.
இதன் பின்னரே சிறுமி தெருக்களில் அழுதுகொண்டே சுற்றித்தெரிந்ததை கண்டு மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தற்போது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் சிறுமியின் தாய், சிறுமியை வாங்கிய லஹ்ரு யாதவ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ரவி வர்மா ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.