

அமெரிக்கா-ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவிவரும் வேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
நேற்று காலை ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தைப் தனது மனைவியுடன் ரூபியோ பார்வையிட்டார். இருவரும் அதன் முன்னால் நின்று புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தாஜ்மஹாலின் ஈரானிய வேர்களைச் சுட்டிக்காட்டி, ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் ரூபியோவை கிண்டல் அடித்துள்ளது.
ரூபியோவின் புகைப்படங்களை மேற்கோள் காட்டி ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிற்கு உலக வரலாறு அல்லது கட்டிடக்கலை குறித்த சரியான அறிவு இருந்திருந்தால், அவர் ஒருபோதும் இந்த இடத்திற்கு வந்து புகைப்படம் எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளது.
ஒருபுறம், ஈரான் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து, பண்டைய ஈரானிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தையே முற்றிலுமாக அழிக்க அமெரிக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
ஆனால், மறுபுறம் அதே பெர்சிய கலாச்சாரத்தின் மிக உயரிய அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலை அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளரே வந்து ரசிப்பதில் உள்ள அரசியல் முரண்பாடு வெளிப்பட்டுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹால்
முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது மறைந்த மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக இந்தத் தாஜ்மகாலைக் கட்டினார். பேரரசி மும்தாஜ் மஹால் பூர்விகமாகப் பெர்சிய (ஈரானிய) வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
தாஜ்மஹாலில் பெர்சியக் கட்டடக்கலையின் தாக்கம் நிறைந்துள்ளது. அதன் பிரம்மாண்டமான குவிமாடங்கள், சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள நுணுக்கமான இஸ்லாமியக் கையெழுத்துக் கலைகள் மற்றும் பாரம்பரிய 'சார்பாக்' தோட்ட வடிவமைப்பு என அனைத்தும் பெர்சியக் கலை வடிவங்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.