

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பகிரப்பட்ட ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மீதான மதிப்பு உலகளாவிய நன்மைக்கான ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்குவதாகப் பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
"140 கோடி இந்திய மக்களின் சார்பில், அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும், அமெரிக்கப் பொதுமக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு என்பது வெறும் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான கூட்டாண்மை மட்டுமல்ல.
ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போன்ற இரு நாடுகளுக்கும் பொதுவான கொள்கைகளே இந்தத் தசாப்த கால நட்புறவின் உண்மையான பலமாகும்.
இந்த உயர்வான விழுமியங்கள் தான் இரு வல்லரசு நாடுகளின் நட்பை உலகளாவிய அமைதி மற்றும் நன்மைக்கான ஒரு பிரிக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது
வரவிருக்கும் அடுத்த 250 ஆண்டுகள் அமெரிக்காவிற்குப் பன்மடங்கு செழிப்பையும், அமைதியையும், தொடர் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும். இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டாண்மை உலகிற்குப் புதிய வழியைக் காட்டட்டும்" என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
கடந்த மாதம், பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டில் அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவது இறுதி தருவாயில் உள்ளதாக அண்மையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஓமன் கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலில் வணிக கப்பலில் பயணித்த இந்திய மாலுமிகள் கொள்ளப்பட்டது இரு நாடுகள் இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து டிரம்ப் இடம் பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தாரா என்ற கேள்வி விடையின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருட தொடக்கத்தில் டிரம்ப் இந்தியா வருவார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.