

உத்தரகாண்ட், குஜராத் மற்றும் அசாமைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் பாஜக அரசு ஒருங்கிணைந்த சிவில் சட்டத்தை அமல்படுத்த உள்ளது.
பொதுமக்கள் மற்றும் மத, சமூக அமைப்புகளின் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்ட பிறகு, மாநிலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரசாத் தேசாய் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு மாவட்டங்களில் முகாமிட்டு, சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைக் கேட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ளும் இந்தக் குழு, ஒருங்கிணைந்த சிவில் சட்ட மசோதாவைத் தயாரித்து அரசுக்குச் சமர்ப்பிக்கும்.
இதன் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.
மேலும், பொதுமக்களின் ஆலோசனைகள் இணையதளத்தில் வாயிலாகவும் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம்
UCC எனப்படும் பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் மதம், ஜாதி வேறுபாடின்றி திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, மற்றும் ஜீவனாம்சம் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வரும் திட்டமாகும்.
முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினர் இது மத சுதந்திரத்தை மீறுவதாகவும் தங்களின் தனிப்பட்ட மத நடைமுறைகளையும் கலாச்சார அடையாளத்தையும் அழித்துவிடும் என அஞ்சுகின்றனர். இருப்பினும் பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.