‘வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள்’ - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சர்ச்சை பேச்சு

உலகம் முழுவதும் உள்ள அனைவருமே மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் உங்களுக்கு அதற்கு எந்த தகுதியும் இல்லை.
‘வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள்’ - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சர்ச்சை பேச்சு
Published on

"வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகளைப் போல மாறி அடிப்படை கட்டமைப்பை தாக்கத் தொடங்குகிறார்கள்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றம் தனக்கு 'மூத்த வழக்கறிஞர்' அந்தஸ்து வழங்கத் தாமதம் செய்வதாகக் கூறி, வழக்கறிஞர் சஞ்சய் துபே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுத் தொடர்பான விசாரணையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு, மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து என்பது நீதிமன்றத்தால் வழங்கப்படும் கௌரவம் என்றும், அதை ஒரு அலங்கார அந்தஸ்து போலத் தேடி அலையக் கூடாது என்றும் மனுதாரரைக் கண்டித்தது.

“இந்த உலகம் முழுவதும் உள்ள அனைவருமே மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் உங்களுக்கு அதற்கு எந்த தகுதியும் இல்லை” என்று மனுதாரரிடம் நீதிபதிகள் அமர்வு கூறியது.

மேலும் மனுதாரர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பயன்படுத்திய மொழியைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, "சமூகத்தில் ஏற்கனவே நீதித்துறை அமைப்பைத் தாக்கும் ஒட்டுண்ணிகள் உள்ளனர், அவர்களுடன் நீங்கள் சேர விரும்புகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தொழிலில் இடமோ, வேலையோ கிடைக்காத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல மாறுகிறார்கள். அவர்கள் மீடியா, சமூக ஊடகவியலாளர்கள் அல்லது தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாக மாறி, எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

மனுதாரருக்கு வேறு வழக்குகள் எதுவும் இல்லையா என்று நீதிபதி அமர்வு கேட்டதோடு, மூத்த வழக்கறிஞர் பதவியை நாடும் ஒருவருக்கு இத்தகைய நடத்தை பொருத்தமானதா என்றும் கேள்வி எழுப்பியது.

மேலும், டெல்லியில் கறுப்பு அங்கி அணியும் பல வழக்கறிஞர்களின் சட்டப் பட்டங்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பார் கவுன்சில் இதில் நடவடிக்கை எடுக்காது என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுத் தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

எனினும், வேலையில்லாத இளைஞர்களையும், ஆர்வலர்களையும் 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துவருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com