

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் அடுத்த தக்சிலாவில்(தக்சசீலா) உள்ள இரண்டு வரலாற்று சின்னங்களின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மறு நிர்மாணங்களை திரும்ப பெறுமாறு ஐக்கிய நாடுகள் சபை பாகிஸ்தானை அறிவுறுத்தியுள்ளது.
தெற்காசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக தக்சீலா விளங்கிவருகிறது. இதன் தோற்றம் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இந்து இதிகாசங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இந்த வளாகத்திற்குள் அமைந்துள்ள மோஹ்ரா மெராடு மற்றும் சிர்காப் தொல்பொருள் பிரிவுகளில், கட்டுமானங்கள் மற்றும் அதன் சுவர்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிப்படுத்தின.
இதையடுத்து உலக பாரம்பரிய தளங்களில் நவீன சிமெண்ட் போன்ற பொருட்களை பயன்படுத்துவது, உலகளாவிய பாதுகாப்பு விதிகளை மீறுவதாக பாகிஸ்தான் தொல்லியல் மற்றும் அருங்காட்சியத் துறை நிபுணர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில் காந்தாரா மற்றும் வேத கால வரலாற்றின் முக்கிய தளமான தக்சீலத்தில் புதிதாக மாற்றம்செய்யப்பட்ட ‘தேவையற்ற தலையீடுகளை’ உடனடியாக நிறுத்தாவிட்டால், அதன் மதிப்புமிக்க அந்தஸ்து இழக்கும் அபாயம் ஏற்படும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும் அவ்வாறு செய்யத்தவறினால், அச்சின்னங்கள் யுனெஸ்கோவின் அபாய பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் பாகிஸ்தானை ஐ.நா எச்சரித்துள்ளது.