திரிணாமுல் கதை சில நாட்களில் முடிந்துவிடும்- சொந்தக்கட்சி எம்பி ஆவேசம்

கொல்கத்தா வீதிகளில் பெண்களை போராட்டத்தில் இறங்க வைத்தது.
மம்தா பானர்ஜி
Published on

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அடைந்த தோல்வி, அவரது விசுவாசமான கட்சி தலைவர்களை கடுமையான விமர்சகர்களாக மாற்றியுள்ளதாக தெரிகிறது. ஊழல் அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும், நிகழ்வுகளின் போது மௌனம் காத்த தலைவர்கள் இப்போது பேச தொடங்கியுள்ளனர்.

அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து விமர்சனங்களிலும், கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இளம் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதே மிகப்பெரியதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் கொல்கத்தா வீதிகளில் பெண்களை போராட்டத்தில் இறங்க வைத்தது.

சமீபத்தில் குரல் எழுப்பிய தலைவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய் ஆவார். இவர், மற்ற கருத்துக்களுடன், கட்சி சிதைந்துவிடும் என்றும் கணித்திருந்தார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ராய் கூறும் போது, "திரிணாமூல் காங்கிரஸ் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். தேசிய அரசியலில்கூட, அந்த கட்சி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இனி எந்த கட்சியும் திரிணாமூலுடன் கைகோர்க்காது" என்றார்.

ஆர்.ஜி. கர் கொலை சம்பவம் குறித்து அவர் கூறும் போது, "ஆர்.ஜி. கர் சம்பவம் கையாளப்பட்ட விதம் தவறானது. குற்றவாளிகளை பாதுகாக்க தெளிவான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக காவல்துறை பயன்படுத்தப்பட்டது. மக்களின் உணர்வுகள் கட்சிக்கு எதிராக இருந்தன.

கட்சி அதை புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. கட்சித் தலைவர்கள் உருவாக்கியுள்ள ஊழல் மலை கற்பனைக்கு எட்டாதது, அதை மம்தா பானர்ஜி கட்டுப்படுத்தத் தவறிவிட்டார்," என்று குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com