ரூ. 440 கோடி இருப்புள்ள மம்தா கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் புகாரில் நடவடிக்கை

திரிணாமுல் காங்கிரசின் நிதியை கையாளுவதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உரிமை கோருவதால் ரூ.440 கோடியுடன் கூடிய 3 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிமம்தா பானர்ஜி
Published on

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் பெரும் பிளவை சந்தித்து வருகிறது. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலும் கட்சியினர் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். கட்சியில் பெரும் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசின் நிதியை கையாளுவதில் போட்டி ஏற்பட்டு உள்ளது.

தனியார் வங்கியில் கட்சியின் பெயரில் உள்ள 3 கணக்குகளில் ரூ.440 கோடி பணம் உள்ளது. இந்த கணக்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதன்பேரில் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த பணம் எங்கிருந்து வந்தது? எனவும். அதன் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு அதில் கூறியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதற்காக இந்த 3 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது மட்டுமே தடை செய்யப்பட்டு உள்ளதாகவும், பணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

முன்னதாக கட்சியின் முன்னாள் மந்திரியும், அதிருப்தி அணியில் இணைந்து இருப்பவருமான அரூப் பிஸ்வாஸ் சமீபத்தில் வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கட்சியின் பொருளாளராக இருந்த அவர் அனுப்பிய அந்த கடிதத்தில், கட்சிக்குள் எழுந்துள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் வரை வங்கிக்கணக்குகளை முடக்கி வைக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த வங்கிக்கணக்கு முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கடந்த 5-ந்தேதி நடந்த கட்சியின் செயற்குழுவிலேயே, கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து அரூப் பிஸ் வாஸ் நீக்கப்பட்டதாகவும், அவருக்குப்பதிலாக சுபாசிஷ் சக்கரவர்த்தி பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் மம்தா பானர்ஜி ஆதரவு எம்.எல்.ஏ. குணால் கோஷ் தெரிவித்து உள்ளார்.

எனவே கட்சியின் நிதி தொடர்பாக பேசுவதற்கு அரூப் பிஸ்வாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com