குஜராத்தில் புடவை மடிக்கும்போது விபரீதம்: ஃபோம் தாள்கள் தீப்பிடித்ததில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் புடவை மடிக்கும்போது விபரீதம்: ஃபோம் தாள்கள் தீப்பிடித்ததில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்
Published on

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழுந்தை உயிரிழந்துள்ளனர்.

லிம்பாயத் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட மித்தி காடி பகுதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி வீட்டில் காலை சுமார் 10 மணியளவில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடும்பத்தினர் ஸ்விட்ச் ஃபோர்டுக்கு அருகில் நின்றுகொண்டு ஃபோம் தாள்களைப் பயன்படுத்தி புடவைகளை மடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ஃபோம் தாள்களில் மின்பொறி பாய்ந்து தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளே சிக்கியிருந்த ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் பேகம் அன்சாரி (65), ஹுசா பேகம் அன்சாரி (18), ஷபினா அன்சாரி (28), பர்வின் அப்துல் அன்சாரி (19), சுபான் அலி அன்சாரி (4) ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 5 பேரும் உயிரிழந்தனர். தீப்பிடித்த அறையில் இருந்து வேறு அறைக்கு சென்றாலும், ஃபோம் தாள்களில் இருந்து எரிந்து வெளியேறிய ரசாயனங்களின் நச்சுப்புகை அவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், புடவைகள் மடிக்கும் பேக்கிங் வேலைக்காக அவர்கள் சூரத்திற்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com