இலவச விசா சலுகையை அதிரடியாக ரத்து செய்த தாய்லாந்து: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி!

விசா இல்லாமல் தாய்லாந்தில் 60 நாட்கள் தங்கியிருக்கலாம் என்ற முறையை அந்நாட்டு அரசு மாற்றி அமைத்துள்ளது.
இலவச விசா சலுகையை அதிரடியாக ரத்து செய்த தாய்லாந்து: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி!
Published on

தாய்லாந்து அரசு தனது விசா விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரபலமான 60 நாட்கள் இலவச விசா சலுகையை முழுமையாக ரத்து செய்ய அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த மே 19, 2026 அன்று இந்த புதிய விசா கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறைகள் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்ததும், இந்தியப் பயணிகள் மீண்டும் பழையபடி 'விசா ஆன் அரைவல்' என்ற பிரிவிற்கு மாற்றப்படுவார். இந்த மாற்றங்கள் ராயல் கெஜட் என்ற தாய்லாந்து அரசின் இதழில் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். அதுவரை தற்போதைய 60 நாள் இலவச விசா முறையே தொடரும்.

புதிய விதிகளின் கீழ் இந்தியர்கள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு விசா கட்டாயமாக வேண்டும். விமான நிலையத்தில்தான் நேரடியாக விசா பெற வேண்டும். விசா பெற்ற பிறகு 15 நாட்கள் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதிப்பார்கள். மேலும் 30 நாட்கள் வரையிலும் கூட மாற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இலவச விசா கொள்கை மாறுவதால், இந்தியர்கள் மீண்டும் விசா கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு முன்பு விசா ஆன் அரைவலுக்கு 2,000 தாய் பாட் (சுமார் ₹6,000) வசூலிக்கப்பட்டது. இந்த கோடைகாலத்தில் தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும் விதமாக அமையும்.

2024 ஆண்டு அறிமுகப்படுத்திய 60 நாட்கள் இலவச விசா திட்டத்தை தற்போது நிறுத்த இரண்டு முக்கிய காரணங்கள் கூறுகின்றது தாய்லாந்து அரசு.

விசா சலுகையை ரத்து செய்வதற்கான காரணம்

இலவச விசா சலுகையைப் பயன்படுத்திப் பலர் தாய்லாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்வது, போலி நிறுவனங்களை நடத்துவது மற்றும் சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன.

தாய்லாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுராசக் பன்சரோன்வோராகுல் கூறுகையில், "அரசாங்கம் இனி வெறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் நம்பாமல், தரமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறது" என விளக்கமளித்துள்ளார்.

பாதுகாப்பை பலப்படுத்த தாய்லாந்து அரசு "ஒரு நாடு, ஒரே விசா விலக்கு சலுகை" என்ற புதிய கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி விசா இல்லாமல் வரக்கூடிய நாடுகளின் பட்டியல் 57-லிருந்து 54 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா, அஜர்பைஜான், பெலாரஸ் மற்றும் செர்பியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே இனி விசா ஆன் அரைவல் பட்டியலில் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி, பழைய விதிமுறைகளின் கீழ் தாய்லாந்திற்குள் சென்று தங்கியிருக்கும் இந்தியப் பயணிகள் அனைவரையும் இந்த புதிய விதிமுறைகள் பாதிக்காது. அவர்களுக்கான கால அளவு முடியும் வரை அங்கேயே தங்கி கொள்ளலாம்.

இறுதித் தேதிகள் மற்றும் துல்லியமான விசா நடைமுறைகளை அறிந்துகொள்ள, இந்தியாவிலுள்ள தாய்லாந்து தூதரகத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தாய்லாந்து சுற்றுலா வாரியம் இந்தியப் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com