search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சொத்துக்காக மனைவி, மகளுடன் சேர்ந்து பெற்றோரை தீர்த்துக்கட்டிய தொழிலாளி
    X

    சொத்துக்காக மனைவி, மகளுடன் சேர்ந்து பெற்றோரை தீர்த்துக்கட்டிய தொழிலாளி

    • போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனையில் தம்பதியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • நரசிம்மமூர்த்திக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒசக்கோட்டை தாலுகா புறநகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா (வயது 70). இவரது மனைவி முனிராமக்கா (60). இந்த தம்பதிக்கு நரசிம்மமூர்த்தி (50) என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.

    நரசிம்மமூர்த்தி தனது மனைவி பாக்யா, மகள் வர்ஷா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ராமகிருஷ்ணப்பா மற்றும் அவரது மனைவி முனிராமக்கா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனையில் தம்பதியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களின் மகன் நரசிம்மமூர்த்தி மற்றும் அவரது மனைவி பாக்யா ஆகியோரிடம் பெங்களூரு மாவட்ட புறநகர் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதண்டி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

    நரசிம்மமூர்த்திக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு ராமகிருஷ்ணப்பா மறுத்துள்ளார். மேலும் தனது சொத்துக்களை மகள்களுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மமூர்த்தி தனது மனைவி பாக்யா (48), என்ஜினீயரிங் படிக்கும் மகள் வர்ஷா மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோருடன் சேர்ந்து தனது பெற்றோரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இந்த வழக்கில் நரசிம்மமூர்த்தி அவரது மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

    Next Story
    ×