சோனியா ராகுல்யான் பறக்க விட முயற்சிக்கிறார்- மத்திய மந்திரி கிண்டல்

இந்தியா கூட்டணி வாரிசு அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது.இந்தியா கூட்டணி தலைவர்கள் எதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.
சோனியா ராகுல்யான் பறக்க விட முயற்சிக்கிறார்- மத்திய மந்திரி கிண்டல்
Published on

மும்பை:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள ஜல்கான் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இந்தியா கூட்டணி வாரிசு அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும் பாருங்கள். உங்களுக்கே நன்றாக தெரியும்.

அதே சமயத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியை பாருங்கள். எதிர்கால சிந்தனையுடன் மோடி எப்படி செயல்படுகிறார் என்று உங்களுக்கு தெரியும். உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய சிறப்பு அவருக்கு உண்டு.

சந்திரயானை நிலவுக்கு அனுப்பி உலகையே அவர் வியக்க வைத்தார். அதே சமயத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

சோனியா தனது மகன் ராகுலை பிரதமராக்க முயற்சி செய்கிறார். உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவை முதல்-மந்திரி யாக்க முயற்சி செய்கிறார். லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல்-மந்திரியாக்க போராடுகிறார்.

சோனியாகாந்தி இதுவரை 19 தடவை ராகுலை பிரதமராக்க முயற்சி செய்து விட்டார். அவரது ராகுல்யான் விண்கலம் 19 தடவையும் தோல்வியை தழுவி விட்டது. இப்போதும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். இதிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தெளிவான சிந்தனையுடன் இருப்பது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com