

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டத்தில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறக்கும் என்று எண்ணி கணவரே தனது கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை நீச்சல் குளத்தில் தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹனுமகொண்டா மாவட்டம் புன்னேலா கிராமத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (29), தனது மனைவி ஃபர்ஹத் (26) மற்றும் மகள்கள் உமேரா (8), ஆயிஷா (6) ஆகியோரை ஏப்ரல் 1 அன்று இரவு நீச்சல் குளத்தில் தள்ளி கொலை செய்துள்ளார்.
கொலையைச் செய்வதற்கு முன்னதாக நீச்சல் குளத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அணைத்துவிட்டு, மின்சாரத்தையும் துண்டித்துள்ளார். பின்னர் இது தற்செயலாக நடந்த விபத்து என நாடகமாடியுள்ளார்.
மறுநாள் காலை சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தையும், மேலும் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி வரும் சண்டைகளை சுட்டிக்காட்டி போலீசாரிடம் குடும்பத்தினர் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
பின்னர் போலீசார் விசாரணையில் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருந்த மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கும் எனச் சந்தேகித்து இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியது தெரியவந்தது.
இதற்கு முன்னதாக தனது மனைவிக்கு இரண்டு முறை சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ய அசாருதீன் கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்தில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவும் அவர் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.