இந்த வகுப்பு மாணவர்கள் 3வது மொழிக்கு பொதுத்தேர்வு எழுதவேண்டாம்... மும்மொழிக் கொள்கையில் தளர்வுகளை அறிவித்த சிபிஎஸ்இ!

நடப்பாண்டில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்பு மாணவர்கள் 3வது மொழிக்கு பொதுத்தேர்வு எழுதவேண்டாம்... மும்மொழிக் கொள்கையில் தளர்வுகளை அறிவித்த சிபிஎஸ்இ!
Published on

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE), தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக புதிய தளர்வுகள் மற்றும் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மூன்றாவது மொழியைப் படிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே படித்து வரும் பழைய இரு மொழிக் கொள்கைப்படியே பொதுத் தேர்வை எழுதலாம்.

தற்போது 7,8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தாங்கள் 10ம் வகுப்பை எட்டும்போது மூன்றாவது மொழிக்கான பொதுத்தேர்வை எழுத தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் தங்கள் பாடத்திட்டத்தில் ஒரு இந்திய மொழியை சேர்த்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழிக்கு பள்ளியில் அகமதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது மூன்று மொழிகளை தொடர்ந்து கற்பார்கள். ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் மாணவர்கள், ஒரு இந்திய மொழியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை முழுமையாக செயல்படுத்தப்படும். இந்த மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும். இவர்கள் பத்தாம் வகுப்புக்கு செல்லும்போது கட்டாயம் மூன்றாவது மொழிக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்.

NEP 2020 என்ன சொல்கிறது?

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அவற்றில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இந்தி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, குஜராத்தி, ஒடியா மற்றும் அஸ்ஸாமி இந்திய மொழிகளில் அடங்கும்.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபு, ஸ்பானிஷ் போன்றவை வெளிநாட்டு மொழிகளில் அடங்கும்.

முன்னதாக கடந்த மே மாதம் வெளியான சுற்றறிக்கையால் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக, மத்திய அரசு இந்த புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com