கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்... 6 பேர் உயிரிழப்பு... மும்பையில் சோகம்

மற்றொரு நபர் ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்... 6 பேர் உயிரிழப்பு... மும்பையில் சோகம்
Published on

மும்பையின் மன்குர்ட் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த பலத்த மழையின்போது, ​​மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் ஒருவர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; அவரை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.

பிருஹன் மும்பை மாநகராட்சி (BMC) அதிகாரிகளின் தகவலின்படி, நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சதாப்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருந்தனர். மற்றொரு நபர் ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சிகிச்சை:

காயமடைந்த ஒருவர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர்கள் தெரிவித்தனர். மண்டலா பகுதியில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு பின்னால் இருக்கும் ஜனதா நகரின் 'சால்' எண் 5-இல் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர்.

முதற்கட்ட தகவல்களின்படி, அந்த மூன்று மாடி கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்த இரண்டு அல்லது மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இதைத் தொடர்ந்து மும்பை தீயணைப்புப் படை, காவல்துறை, மாநகராட்சி வார்டு அலுவலகம் மற்றும் '108' ஆம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொய்வுநிலை:

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படும் நபரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். உள்ளூர் பாஜக கவுன்சிலர் நவநாத் பான், மேலும் ஒருவர் காணாமல் போனதாக தெரிவித்தார்.

அந்த கட்டிடம் மாவட்ட ஆட்சியருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த அருகிலுள்ள குடிசை ஒன்றின் மீது இடிந்து விழுந்ததாக அவர் கூறினார். பலத்த மழையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com