கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா?

சித்தராமையா முதல் மந்திரியாக பதவி ஏற்று கடந்த நவம்பருடன் இரண்டரை ஆண்டு நிறைவு பெற்றது.
siddharamaiah
Published on

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல் மந்திரி பதவிக்கு சித்தராமையா, கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் மேலிடம் நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல் மந்திரி பதவியை வழங்கியது.

அப்போது, சித்தராமையா இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்தபிறகு முதல் மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க முன்வர வேண்டும் என கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது எழுத்துபூர்வமாக போடப்படவில்லை. இரண்டரை ஆண்டுக்கு பிறகு ஆட்சி தலைமையை விட்டுக்கொடுப்பதாக சித்தராமையா சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

சித்தராமையா முதல் மந்திரியாக பதவி ஏற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டு நிறைவு பெற்றது. இதனால் டி.கே.சிவக்குமார், தனக்கு முதல் மந்திரி பதவி வழங்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவக்குமாருக்கு ஆதரவாக 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்தனர். இதன் காரணமாக கட்சிக்கும், ஆட்சிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் தீர்மானிக்கும் வரை பொறுமை காக்கும்படி டி.கே.சிவக்குமாருக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே, காங்கிரஸ் மேலிடம் மே 26-ம் தேதி டெல்லி வரும்படி சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று அவர்கள் 2 பேரும் டெல்லி சென்றனர். நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தியை முதல் மந்திரி சித்தராமையா சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனை ஏற்று முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com