

வாக்காளர் பட்டியல் 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (SIR) செய்யும் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) முடிவை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, விரிவான விசாரணைகளுக்கு பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், இன்று (மே 27) தங்கள் தீர்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த SIR நடவடிக்கையின் சட்டபூர்வத்தன்மையை இம்மனுக்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. அரசியலமைப்பின் 326-வது பிரிவு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறும் வகையில் இந்த திருத்த செயல்முறை அமைந்திருப்பதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
இந்த சர்ச்சை முக்கியமாக, தேர்தல் ஆணையம் விதித்துள்ள ஒரு நிபந்தனையை சுற்றியே மையமிட்டுள்ளது. அதாவது, 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலோ — அல்லது சில மாநிலங்களில் 2003-ஆம் ஆண்டு பட்டியலிலோ — தங்கள் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள், அப்பட்டியல்களில் பெயர் இடம்பெற்றிருந்த ஒருவருடன் தங்களுக்குள்ள வம்சாவளித் தொடர்பை (ancestral linkage) நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிபந்தனை உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக தங்கள் வம்சாவளியை முந்தைய வாக்காளர் பதிவுகளுடன் இணைத்து காட்டும் ஆவண சான்றுகள் இல்லாத விளிம்புநிலை மற்றும் புலம்பெயர் மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனுதாரர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
வழக்கு விசாரணையின் போது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களிடையே வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், சிரமங்களை குறைக்க உதவும் வகையில் உச்ச நீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.
சரிபார்ப்பு நோக்கங்களுக்காகத் தேர்தல் ஆணையம் தொடக்கத்தில் 11 ஆவணங்களை அடையாளம் காட்டியிருந்தது. இருப்பினும், SIR செயல்முறைக்குக் கூடுதல் ஆவணமாக 'ஆதார்' அட்டையையும் சேர்த்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் பின்னர் உத்தரவிட்டது.
பீகார் மாநிலத்தில் SIR நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவெடுத்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இம்மனுக்களில் பெரும்பாலானவை தாக்கல் செய்யப்பட்டன.
அதன் பின்னர், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த திருத்த பணி விரிவுபடுத்தப்பட்டது.
வாக்காளர் பட்டியல்களின் உண்மை தன்மையை உறுதி செய்யவும், இரட்டைப் பதிவுகள் அல்லது தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்கவும் மட்டுமே இந்த திருத்த பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறி, தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்டறிந்த பிறகு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு ஜனவரி 29-ஆம் தேதியன்று தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.