

பீகாரில் SBI வங்கி ஏடிஎம் ஒன்று சலூனாக மாற்றப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் தானாப்பூர் பகுதியில் உள்ள ரூபாஸ்பூர் என்ற இடத்தில் இந்த வினோத சலூன் அமைந்துள்ளது.
இந்த இடம் வெளிப்பார்வைக்கு அப்படியே எஸ்பிஐ ஏடிஎம் மையம் போலவே காட்சியளித்தது.
எஸ்பிஐ லோகோ, போர்டு மற்றும் ஏடிஎம் அறையின் வெளிப்புற வடிவமைப்பு என அனைத்தும் அப்படியே இருந்ததால், மக்கள் இது ஏடிஎம் என்று நினைத்தே உள்ளே சென்றுள்ளனர்.
பணம் எடுப்பதற்காகவோ அல்லது கணக்கில் உள்ள தொகையைச் சரிபார்ப்பதற்காகவோ உள்ளே சென்றவர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு ஏடிஎம் இயந்திரத்திற்குப் பதிலாக, முடி வெட்டும் நாற்காலிகள், கண்ணாடிகள் மற்றும் சவரம் செய்யும் உபகரணங்கள் இருந்தன.
உஷா வில்லா பகுதியில் செயல்பட்டு வந்த இந்த ஏடிஎம் இயந்திரம் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஆனால், வங்கியின் பெயர்ப்பலகை மற்றும் லோகோ மாற்றப்படவில்லை.
அந்த காலி இடத்தை சலூன் நடத்துவதற்கு உரிமையாளர் வாடகைக்கு விட்டுள்ளார். சலூன் உரிமையாளரும் ஏடிஎம் போர்டை அகற்றாமல் அப்படியே கடையைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் 'ஏடிஎம் சலூன்' என்ற பெயரில் வைரலானது. ந்த விஷயம் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, உடனடியாக அந்த இடத்திலிருந்த எஸ்பிஐ போர்டு மற்றும் லோகோக்கள் அகற்றப்பட்டுள்ளன.