பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி கோர்ட்

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வதேரா அதிக விலைக்கு நிலத்தை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி கோர்ட்
Published on

அரியானா மாநிலத்தின் குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேரா விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை ராபர்ட் வதேரா ரூ.58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார். இதில் ராபர்ட் வதேரா தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எப் நிறுவனத்திடம் இருந்து சொத்துகளை வாங்க அதிக அளவில் சலுகை எதிர்பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் பரிமாற்றம் சட்ட விரோதமாக இருந்ததாக கூறி நிலப்பதிவை பதிவுத்துறை ரத்துசெய்தது.

இந்த நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேரா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நேரில் ஆஜராக டெல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ராபர்ட் வதேரா இன்று ஆஜரானார். நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவருக்கு டெல்லி சிறப்பு கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியது. ரூ.50,000 மதிப்பிலான தனிநபர் பிணை மற்றும் ஒருநபர் ஜாமீன் உத்தரவாதத்தின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. வழக்கின் விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

X

Maalai Malar
www.maalaimalar.com