

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் மாட்டிறைச்சியை, ஆட்டிறைச்சி எனக்கொடுத்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, புதிகேரே கிராஸ் அருகே பொம்மனஹள்ளியில் உள்ள இசிரி ஹப்பில் அமைந்துள்ள காயலோரம் என்ற உணவகத்தின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் கடந்த 18 மாதங்களாகச் செயல்பட்டு வந்துள்ளது.
உணவகத்திற்குச் சென்ற இளைஞர்கள் மட்டன் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் பரிமாறப்பட்ட இறைச்சியின் சுவை மற்றும் தன்மையில் சந்தேகம் அடைந்த அவர்கள், இதுதொடர்பாக உணவக ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அது மாட்டிறைச்சி என தெரியவர, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உணவகத்தில் முதற்கட்ட சோதனை நடத்தினர். விசாரணையில், ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சி பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததை அடுத்து உணவகம் சீல் வைக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த அவலஹள்ளி போலீசார், இந்த வழக்கு தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த ஜிஜூ மற்றும் ஷிம்பு என்ற இருவரை கைது செய்துள்ளனர்.
இந்த உணவகத்தில் பணிபுரிந்த மற்றொரு இளைஞர் அபிலாஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார், அவரையும் தேடிவருகின்றனர். கைப்பற்றப்பட்ட இறைச்சி மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தடயவியல் பகுப்பாய்வின் முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.