

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம், அல்லூருபாடுவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வர்லு (வயது55). ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், 2 நாட்களுக்கு முன்பு அவர் விஜயவாடாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவரது நிலை மோசமடைந்தது.
அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனை அகற்றினால் அவர் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கூறினர். அவர் இனி உயிர் பிழைக்கமாட்டார் என்று எண்ணி, நேற்று காலை இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து உறவினர்களும் காலையிலேயே அல்லூருபாடுவில் உள்ள வெங்கடேஷ்வர்லுவின் வீட்டிற்கு வந்தனர். வெங்கடேஷ்வர்லுவின் குடும்பத்தினர் வீட்டின் முன் பந்தல் அமைத்து நாற்காலிகளையும் அமைத்தனர்.
இறந்தவர் உடலை வைக்கும் ஒரு ஏசி பெட்டி தயார் செய்யப்பட்டது. காலை சுமார் 10 மணியளவில் வெங்கடேஷ்வர்லு ஆம்புலன்சில் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
அவரைக் கண்ட உறவினர்கள், அவர் இன்னும் உயிருடன் இருப்பதை கவனித்து, அவரை எப்படி அழைத்து வரலாம் என்று குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்பினர். இப்படிச் செய்வது சரியல்ல என்று கூறினர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
பெரியவர்கள் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர். மீண்டும் வெங்கடேஷ்வர்லுவை விஜயவாடா மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். பாதி வழியிலேயே வெங்கடேஷ்வர்லு உயிரிழந்தார்.
பின்னர், அவர் உடல் மீண்டும் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.