கணவர், 2வது மனைவி, மாமியார் உட்பட 4 பேரை கொன்று காருடன் எரித்த முதல் மனைவி

பிரேத பரிசோதனையில் கருகி இறந்த 4 பேர் உடலிலும் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையின் போதும், போலீசார் நடத்திய விசாரணையின் போதும் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டது.
கணவர், 2வது மனைவி, மாமியார் உட்பட  4 பேரை கொன்று காருடன் எரித்த முதல் மனைவி
Published on

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்சிங். காங்கிரஸ் பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருக்கு 2 மனைவிகள். அவர்களுடன் ராம்சிங் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீராம்புரா கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் ராம்சிங்கின் சொகுசு கார் தீப்பிடித்து எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காரை சோதித்தபோது, அதற்குள் கருகிய நிலையில் 3 உடல்கள் கிடந்தன. மேலும் அருகில் உள்ள வயல்வெளியில் ஒரு உடல் கிடந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்சிங், அவருடைய தாயார் பூசிதேவி, 2-வது மனைவி சூர்யக்யான் தேவி மற்றும் உறவினர் மகிமா சவுத்ரி என தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் ராம்சிங்கின் முதல் மனைவி சுனிதா மற்றும் அவரது மகன், மகளை கைது செய்து விசாரித்தனர். அப்போது 4 பேரையும் சுனிதாவும், அவரது மகன், மகள் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து காரில் வைத்து எரித்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்சிங்கின் முதல் மனைவி சுனிதா. இவருக்கு சரிதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ராம்சிங், சூர்ய க்யான் தேவி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் தொடர்பாக ராம்சிங்குக்கும், சுனிதாவுக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வந்தது. ஆனாலும் அவர் தனது 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக தெரிகிறது. மேலும் ராம்சிங்கின் தாயார் பூசிதேவி உள்ளிட்டோரும் ஒன்றாகவே கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று இரவு 2-வது திருமணம் தொடர்பாக ராம்சிங்குக்கும், அவரது முதல் மனைவி சுனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராம்சிங்குக்கு ஆதரவாக அவரது தாயார் பூசிதேவி, 2-வது மனைவி சூர்யக்யான் தேவி, உறவினர் மகிமா சவுத்ரி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

சுனிதாவுக்கு ஆதரவாக அவரது மகள் சரிதா, மகன் ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் மோதல் முற்றி கைகலப்பு உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனிதா, மகள் சரிதா, மகன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ராம்சிங், அவரது 2-வது மனைவி சூர்யக்யான் தேவி, மாமியார் பூசிதேவி, உறவினர் மகிமா சவுத்ரி ஆகிய 4 பேரையும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் இந்த கொலைகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று திட்டம் வகுத்தனர். அப்போது அவர்களை காருக்குள் வைத்து எரித்து விபத்து என்று நாடகமாட திட்டமிட்டனர். இதையடுத்து இரவோடு இரவாக 4 பிணங்களையும் வீட்டில் இருந்த சொகுசு காரில் ஏற்றினார்கள். பின்னர் காரை ஓட்டிக்கொண்டு 500 மீட்டர் தொலைவில் வயல்வெளியை ஒட்டி உள்ள நெடுஞ்சாலைக்கு சென்றனர். அங்கு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தீ வைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு வந்து விட்டனர்.

இதற்கிடையே கார் கொழுந்துவிட்டு எரிந்ததால் அதில் இருந்த பிணங்கள் கருகின. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து காணப்பட்டது. காரில் 3 பிணங்கள் கருகிய நிலையில் இருந்தது. காருக்கு வெளியே வயல்வெளியில் ஒரு பிணம் விழுந்து கிடந்தது.

இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்சிங் உள்ளிட்ட 4 பேர் காருக்குள் எரிந்து பலியான சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஸ்ரீராம்புரா கிராமத்தினர் சோகமானார்கள்.

அவர்கள் ராம்சிங் வீட்டில் குவிந்து அழுது புரண்டு கண்ணீர் வடித்தனர். அவர்களுடன் சேர்ந்து கொலையாளிகளான ராம்சிங்கின் முதல் மனைவி சுனிதா, அவரது மகள் சரிதா, மகன் ஆகியோரும் துக்கம் தாங்காமல் அழுவது போல் நடித்தனர். மேலும் சுனிதா துக்கம் விசாரிக்க வந்தவர்கள் மத்தியில் மயக்கம் போட்டும் நடித்தார்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் கருகி இறந்த 4 பேர் உடலிலும் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையின் போதும், போலீசார் நடத்திய விசாரணையின் போதும் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டது.

இதையடுத்து போலீசாருக்கு ராம்சிங்கின் முதல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கிராமத்தினரிடம் விசாரித்த போது ராம்சிங் 2-வது திருமணம் செய்ததில் இருந்து அவரது குடும்பத்தில் நீண்ட காலமாக தகராறு இருந்து வருவதை அறிந்தனர். இதையடுத்து சுனிதா மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக சுனிதாவிடம் போலீசார் முதலில் விசாரணை நடத்திய போது, தனது மாமியார் பூசிதேவி இரவில் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ராம்சிங் உள்ளிட்ட 3 பேரும் அவரை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அப்போது சாலையில் கார் தீப்பிடித்து எரிந்து பலியாகி இருக்கலாம் என்றும் கூறினார்.

அதன்பிறகு உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது தனது மகள், மகனுடன் சேர்ந்து ராம்சிங் உள்ளிட்ட 4 பேரையும் கொன்று காருடன் சேர்த்து எரித்ததாக கூறினார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com