கேரள சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு-பா.ஜ.க ரகசிய கூட்டணி..!- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கேரள சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு-பா.ஜ.க ரகசிய கூட்டணி..!- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

கேரளம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 9-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆளும் இடதுசாரி முன்னணி, ஜக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டம் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சோனியா காந்தியின் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.

இதனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்றார். இருப்பினும் கூட்டத்தில் காணொளி வாயிலாக ராகுல்காந்தி பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:-

இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க., சி.பி.எம். இடையேயான கூட்டணி என 2 சக்திகள் மட்டுமே உள்ளன,பா.ஜ.க, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் ரகசிய கூட்டணி உள்ளது. இரு கட்சிகளும் ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுகின்றன.

அவர்கள் பொது மக்களுக்குப் பொறுப்புடன் நடந்து கொள்ள தவறி விட்டனர். அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் விசாரணையை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்கொள்ளும் வேளையில், முதலமைச்சர் பினராயி விஜயன் மீது ஏன் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மத்திய அமைப்புகள் பாரபட்சமாக குறிவைத்து செயல்டுகின்றன. இதுவே பா.ஜ.க.-சி.பி.எம். இடையே உடன்பாடு இருப்பதற்கான ஆதாரம்.

மத்திய அரசு 2 கோடி வேலைவாய்ப்புகளையும், மாநில அரசு 40 லட்சம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கு வதாக பெரிய அளவில் வாக்குறுதியளித்த போதிலும், வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. மேலும், கேரளாவில் அரசு நியமனங்களில் தகுதியை விட அரசியல் சார்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு, திறமை புறக்கணிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கேரளாவில் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணியாளர்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, மாநிலத்தின் சுகாதார அமைப்பு குறித்த கவலைகளையும் ராகுல்காந்தி தனது பேச்சின் போது வெளிப்படுத்தினார்.

இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

சி.பி.எம். மற்றும் பா.ஜ.க. இடையே ஒரு ரகசிய உடன்பாடு இருப்பதால், அவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை விவரிக்க “கம்யூனிஸ்ட் ஜனதா கட்சி” என்று கூறுகிறேன்.

இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு, மறைமுகமாகப் பயனளிக்கும் வகையில், பா.ஜ.க. பல தொகுதிகளில் வேண்டுமென்றே பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

“நாங்கள் வாக்குறுதியளித்ததைச் செய்வோம். நாங்கள் பொய்யான உறுதிமொழிகளை அளிப்பதில்லை.” ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், உலகளாவிய கால்பந்து நட்சத்திரங்களை வரவேற்கும் திறன் கொண்ட, பிஃபா அங்கீகாரம் பெற்ற மைதானம் ஒன்று கேரளாவில் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com