

மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ்.
அண்மையில் பெங்களூரில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திலும் பங்கெடுத்தார்.
இந்நிலையில் ஒரே பெயரில் நான்கு வாக்காளர் அடையாள அட்டைகளை சட்டவிரோதமாக வைத்துள்ளதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பிரகாஷ் ராஜ் வெவ்வேறு முகவரிகளில் நான்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டி, திலீப் குமார் என்ற நபர் பெங்களூரு நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் நடிகர் பிரகாஷ் ராஜை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே இரண்டு முறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆனால், நீதிமன்றத்தின் அடுத்தடுத்த உத்தரவுகளையும் சம்மன்களையும் மதிக்காமல் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வராத சூழலில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பிரகாஷ் ராஜ் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோர வேண்டும் அல்லது உயர் நீதிமன்றத்தை நாடி இந்த வாரண்டிற்குத் தடை பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.